Comments

உலக செய்தி

ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: காலித் மிஷ் அல்.

ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: காலித் மிஷ்அல்


சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு சில நாட்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் காலித் மிஷ்அல் இந்த கருத்தை வெளியிட்டார். பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

பொதுவாக ஃபலஸ்தீனியர்கள் போர்களை விரும்புவது இல்லை. நாங்கள் ஆக்கிரமிப்பின் கீழும் காலனியாதிக்கத்தின் கீழும் உள்ளோம். காஸாவை அவ்வப்போது போர்களால் இஸ்ரேல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. காஸாவிலும் காஸாவின் எல்லைகளிலும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் நாங்கள் போரை தவிர்க்கவே விரும்புகிறோம். இருந்தபோதும் நாங்கள் சுதந்திரத்தை விரும்பும் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பும் மக்கள். இந்த அநீதியான ஆக்கிரமிப்பிற்கு காஸா ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது.

மேற்கு கரை மற்றும் ஜெரூஸலம் பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து கேட்கப்பட்ட போது அவற்றை மக்கள் எழுச்சி என்றே காலித் மிஷ்அல் குறிப்பிட்டார். அமைதிக்கான வாயில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்தியின் அத்துமீறலிலும் தங்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தங்களின் நலன் குறித்து உலகிற்கு அக்கறை இல்லை என்றே ஃபலஸ்தீனியர்கள் நினைக்கிறார்கள்.

அல் அக்ஸா மஸ்ஜித் வளாகத்தை பலமுறை சேதப்படுத்திய பிறகு தற்போது அதனை இரண்டாக பிரிப்பதற்கு நேதன்யாகு எடுத்த முயற்சியே தற்போதைய எழுச்சிக்கு வித்திட்டது. நாங்கள் நடத்துவது ஒரு எதிர்ப்பு போராட்டம். எங்களின் குழந்தைகளையும் பெண்களையும் புனிதமான எங்கள் நிலத்தையும் காக்க நாங்கள் போராடுகிறோம். நாங்கள் இஸ்ரேலின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள். தற்போது மேற்கு கரை மற்றும் ஜெரூஸலததில் ஆறு இலட்சம் யூத குடியிருப்புவாதிகள் உள்ளனர்.

ஆக்கிரமிப்பு தொடர்ந்து காலனியாதிக்கமும் நீடிக்கும் சூழலில் ஃபலஸ்தீனியர்களால் என்ன செய்ய முடியும்? இராணுவம் மற்றும் குடியிருப்புவாதிகள் ரூபத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடரும் போது நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் மக்களை காப்பதற்கு சர்வதேச சமூகம் கையாலாகாமல் இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதை தவிர வேறு வழி இல்லை. தற்காப்பு போராட்டத்தை உலகின் அனைத்து மக்களும் உபயோகப்படுத்தியே உள்ளனர்.

சர்வதேச சமூகம் இஸ்ரேலிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் அல்லது ஃபலஸ்தீன மக்களின் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும். உலகம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். எங்களை குறை காணக் கூடாது.
ஃபத்தாஹ் மற்றும் ஹமாஸ் இடையேயான முந்தைய பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை விவாதிக்க விரைவில் ஒரு சந்திப்பு நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஹமாஸ், ஃபத்தாஹ் மற்றும் இன்ன பிற குழுவினரிடையேயான உயர்மட்ட சந்திப்புகள் நடைபெறும்.

சிரியா பிரச்சனை காரணமாக ஹமாஸிற்கு ஈரான் அளித்து வந்த ஆதரவு குறைந்துள்ள போதும் அதனுடனான உறவு அறுந்துவிடவில்லை. ஹமாஸ் ஒரு தேசிய விடுதலை இயக்கம். அது அரபு, முஸ்லிம், மேற்கத்திய நாடுகள் என அனைவருடனும் தொடர்புகளை கொண்டுள்ளது. எங்களின் ஃபலஸ்தீன விவகாரத்திற்கு ஆதரவு பெறுவதற்காக உள்ளூர் மற்றும் வெளியுறவு தொடர்புகளை நாங்கள் கொண்டுள்ளோம்.

இவ்வாறு காலித் மிஷ்அல் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.